இலங்கையில் பிரிட்டனின் கூலிப்படையான கினிமினியின் போர்க்குற்றங்கள்! – முக்கிய ஆவணங்களை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஆறு வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்தது ஏன்?

0
33

இலங்கையில் 1980களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனின் கூலிப்படை நிறுவனமான கினிமினி பற்றிய ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், பல வருடங்களாக பிரிட்டிஸ் அரசாங்கம் அவற்றை வெளியிடுவதை தடுத்துவைத்திருந்தது  என முன்னாள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தமாத ஆரம்பத்தில் லண்டனில் இடம்பெற்ற தகவல்தீர்ப்பாய விசாரணையில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் முன்னாள் தலைமை தணிக்கையாளர் கிரஹாம் ஹேண்ட் கினிமினி குறித்த முக்கிய ஆவணங்களை வெளியிடுவதை பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் தடுத்தது என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பின்னரும் ,அவை தொடர்ந்தும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குழப்பமானதாக மர்மமானதாக கவலைக்குரியதாக காணப்படுகின்றது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கினிமினியின் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பகிரங்கப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் ஆறு வருடங்களிற்கு மேல் அவற்றை பகிரங்கப்படுத்தாமல் வைத்திருந்துள்ளனர் .

இதன் காரணமாக இலங்கையின் உள்மோதலில் பிரிட்டனிற்கு உள்ள தொடர்புகள் குறித்த விபரங்கள் 2025 பெப்ரவரி மாதமே வெளியாகியுள்ளன.

டீகிளாசிபைட் யுகே என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தீர்ப்பாயம் கினிமினி தொடர்பான ஆவணங்களை ஏன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

கினிமினி தொடர்பான நூல்கள் மற்றும் ஆவணப்படத்திற்கான விபரங்களை பெறுவதற்காக கினிமினி குறித்த ஆவணங்களை வெளியிடுமாறு முதன்முதலில் 2018இல் தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சில ஆவணங்களை பகிரங்கப்படுத்திய பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஏனைய ஆவணங்களை வெளியிடாமல் வைத்திருந்தது.

இந்த குறிப்பிட்ட ஆவணங்களை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு வெளியிடவுமில்லை அதிகாரபூர்வமாக விலக்கிவைக்கவும் இல்லை.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சில் மிகவும் உணர்வுர்பூர்வமான தகவல்கள் குறித்து ஆராய்ச்சியாளர்களை வழிநடத்தும் அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் தூதுவரான ஹான்ட் இந்த ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு எப்போது அனுமதியளிக்கப்பட்டதுஎன தெரியவில்லை ,அல்லது ஏன் அரசாங்கம் இவ்வளவு காலமாக அவற்றை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தது என்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.