இலங்கையில் 2022ஆம் ஆண்டளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கனால் வெளியிடப்பட்ட மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த நாடுகளுக்கான அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை, நீடித்த மின்வெட்டு, உயர்ந்துவரும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு உள்நாட்டு அமைதியின்மைக்கு தள்ளப்பட்டது.
இந்தநிலையில், சட்டத்திற்குப் புறம்பான மற்றும் தன்னிச்சையான கொலைகள், சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனை, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள், தன்னிச்சையான கைது மற்றும் தடுப்பு, தனிநபர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெற்றன.
மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் காணவும், விசாரணை செய்யவும், வழக்குத் தொடரவும் மற்றும் தண்டிக்கவும் அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது.
மேலும் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியான போராட்டக்காரர்கள் எனவும், போராட்ட முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.