இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்கவும்!

0
154

இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான பேச்சுவார்த்யை உடனடியாக ஆரம்பித்து சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என்.தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வழங்கிய குரல்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக மிகுந்த பாரம்பரியத்துடன் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் தங்களுடைய தொழிலில் ஈடுபடுகின்றபோது இரண்டு தரப்பினரும் தங்களை தொப்புள்கொடி உறவாகவும் இரத்த உறவுகளாகவும் சகோதரர்களாகவும் கருதியே கச்சதீவு பகுதியில் தொழில்புரிந்து வந்தார்கள்.

ஆனால், தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் இருநாட்டு மீனவர்களுக்குமே சில பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக இரண்டு தரப்பினரும் அமைதியாக அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது கட்டாயமாகும்.

இதன்போது சர்ச்சையாக இருக்கின்ற பகுதிகளில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரண்டு தரப்பினரும் சுமுகமாக தங்களுடைய தொழிலில் ஈடுபடுகின்ற வகையிலும் தீர்வை எட்ட வேண்டும்.

இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவர்களின் பிரச்சினையை ஒரு முக்கிய பிரச்சினையாக அதாவது தலையாய பிரச்சினையாக கருதிசெயற்பட வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் வெளிநாட்டு செலவாணியை பெற்றுக்கொடுப்பதில் இருதரப்பு மீனவர்களும் முக்கிய பங்காற்றுகின்றார்கள்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நடைபெற்று தற்போது அது தடைப்பட்டுள்ளது. முதலாவதாக இலங்கையிலும் பின்பு இந்தியாவிலும் என மாறிமாறி நடைபெற்றது.

எனவே அந்த பேச்சுவார்த்தையை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலமாக இரண்டு தரப்பினரும் மனம் திறந்து பேச முடியும். அவ்வாறு பேசுகின்றபோது இலங்கை மீனவர்கள் தாக்கப்படுவதும் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும். தொடர்ந்து இந்த பிரச்சினையை கொண்டுசெல்ல முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மீனவர்களாகிய எம்மிடம் எந்தவிதமான வேற்றுமையும் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே இரண்டு அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையை இனம்கண்டு அதனை கலைவதற்கான நடவடிக்கையை எடுப்பதோடு இரண்டு நாட்டு மீனவர்களும் கச்சதீவு ஒப்பந்தத்துக்கு முன்பாக ஒற்றுமையாக செயற்பட்டார்களோ அதேபோன்று செயற்படுவதற்கு வழிவகுக்க வேண்டும்.

இதனை உடனடியாக செய்வதற்கு இரண்டு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மீனவர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.