29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை தொடர்பான ஐ.நாவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று ஜெனிவாவில் இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக 10 இற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் எனவும், ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. நல்லிணக்கத்திற்கு மிகவும் அவசியமான அரசியல் அதிகாரப்பகிர்வு, அனைத்துப்பிரஜைகளுக்கும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்தல் தொடர்பில் கொண்டிருக்கும் கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்றும், மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துதல் மற்றும் அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபைகளும் செயற்திறனாக இயங்குவதை உறுதிசெய்தல் ஆகியவற்றின் மூலம் உள்ளுராட்சி நிர்வாகத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டுமென்றும் அப்பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாதிக்கத்தின்கீழ் வழக்குத்தொடரக்கூடிய வகையில் கோப்புகள் தயார்நிலையில் வைக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாகக் குறைவான வாக்குகளே கிடைக்கப்பெறுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 10 இற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கப்பெறும் சாத்தியம் உள்ளது என எதிர்வுகூறியுள்ளார். இதேவேளை ஜெனிவாவில் நாடுகளுக்கு ஆதரவாகப் பேரம்பேசும் சில தரப்புக்கள், இம்முறை மனித உரிமைகள் பேரவையில் சீனாவிற்கு எதிராகப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதனைத் தோற்கடிக்கும் நோக்கில் சீனா தமக்கு ஆதரவான நாடுகளை ஒன்றுதிரட்டிவருவதாகவும், எனவே அவ்வனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கையை ஆதரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன. அதன்படி வாக்கெடுப்பில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நிறைவேறும்பட்சத்தில், அது பெரும்பாலும் 51 க்கு 1 தீர்மானம் என்ற பெயரில் அழைக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கும்பட்சத்தில் அதுகுறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, அவசியமான ஒத்துழைப்புக்கள் இலங்கைக்கு வழங்கப்படும். அதன்தொடர்ச்சியாக அத்தீர்மானம் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை எதிர்வரும் 2023 ஜீன் மாதமும், ஆரம்பகட்ட எழுத்துமூல அறிக்கை 2023 செப்டெம்பர் மாதமும், 2 ஆம் கட்ட வாய்மொழிமூல அறிக்கை 2024 மார்ச் மாதமும், முழுமையான இறுதி அறிக்கை 2024 செப்டெம்பர் மாதமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles