இலுப்பைக்குளம் பகுதியில் கிரவல் அகழ்வை நிறுத்துமாறு உத்தரவு:சமன் தர்சன பாண்டிகோராள

0
252

திருகோணமலை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை எதிர்வரும் திங்கட்கிழமைவரை உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வு காரணமாக சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை அடுத்து களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட அரசாங்க அதிபர் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

உடனடியாக இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை பரிசீலிக்க குழுவொன்றை அமைத்து எதிர்வரும் திங்கட்கிழமை அது தொடர்பான முடிவை உரிய தரப்பினருக்கு வழங்குவதாகவும் அதுவரை கிரவல் அகழ்வை நிறுத்துமாறும் உத்தரவிட்ட அரசாங்க அதிபர் முடிவுகளின் அடிப்படையில் உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இக்கள விஜயத்தில் அரசாங்க அதிபருடன் மாவட்ட காணி பயன்பாட்டு பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.எஸ்.கிரிசாந்தி, ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிரவல் அனுமதிபத்திரதாரர்களும் கலந்து கொண்டனர்.