27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் : நீதியரசர் விக்னேஸ்வரன்

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

அந்த அறிக்கையில்,எமது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தமிழ்த் தேசியத்தை சிதைய விடாது பாதுகாத்துக் கொண்டு தமிழ் மக்களிற்குரிய உரித்துக்களை வென்றெடுப்பதே ஆகும். இதன்பொருட்டு அரசியல் அனுபவங்கள் உள்ளவர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

அந்த வகையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் என்னை நம்பி வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தார்கள். எமது கட்சியில் உள்ள துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக நின்று வழிகாட்ட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

என்னைப் போல் மற்றைய தமிழ் கட்சிகளில் உள்ள அரசியல் முதிர்ச்சி கொண்டவர்கள் தாம் வழி காட்டியாக நின்று கொண்டு இளைஞர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் விடவேண்டும் எனநான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதற்கு முன்மாதிரியாக நான் எமது தமிழ் மக்கள் கூட்டணியின் பணிகளில் தொடர்கின்ற அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாது இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து அவர்களுக்கு தொடர்ந்தும் துணைநிற்க முடிவுசெய்துள்ளேன்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டிய தருணம் வந்துள்ளது. அதனை ஏற்று தமிழ் மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் இளையோருக்கு தமது ஆதரவினை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில், கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்த மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்த இந்த காலக்கட்டத்தில் என்னால் முடிந்தளவுக்கு பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் எனது மக்களின் பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்கள் மற்றும் அபிலாஷைகள் பற்றி எடுத்துக் கூறியுள்ளேன்.

குறிப்பாக, தமிழ் மக்களின் வரலாறு மற்றும் உரிமைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வினை சிங்கள மக்கள் மத்தியில் என்னால் ஏற்படுத்த முடிந்துள்ளதாக நம்புகின்றேன். நில ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு சர்வதேச ரீதியான மாநாடுகள் நடத்தி மற்றும் ஒரு ஆவணப்படம் ஒன்றையும் நான் எனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தேன். என்னால் முடிந்தவரை இதே பாதையில் தமிழ் மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும்.

எனது வீடு கொழும்பில் இருந்தாலும், நான் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக எனது அரசியல் சேவையை முன்னெடுப்பேன். சர்வதேச ரீதியாக எனக்கு இருக்கும் தொடர்புகளின் ஊடாக எமது மக்களின் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்பதற்கு நான் தொடர்ந்து உழைப்பேன் – என்றுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles