பாதுகாப்பிற்கு மத்தியில் நாடெங்கிலும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றன. உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவு உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர். உலக மீட்பராக அவதரித்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுஸ்டிக்கப்படுகிறது. நாட்டில், 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் பாதுகாப்பிற்கு மத்தியில், விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.



மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நேற்றிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில், அருட் தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டன. இயேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வினை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் ஆயரினால் திறந்து வைக்கப்பட்டதுடன், மெழுகுதிரி ஜெபிக்கப்பட்டு நீரினுள் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள். உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. இதன்போது 2019ம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு வழிபாட்டினை முன்னிட்டு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மன்னார் மறை மாவட்ட ஆயர் தனது ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார். ‘எமது நாட்டில் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள். ஆனால் இந்த உயிர்ப்பு திருவிழா அவர்களுக்கு ஒளியைத் தர வேண்டும்’ என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மன்னாரிலும், உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி சிறப்பாக இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றது. இன்று காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டன. திருவிழா திருப்பலி இடம்பெற்றபோது தேவாயலங்களை சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


மன்னார் – பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில், நேற்று இரவு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி, பேசாலை பங்குத் தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது. ஈஸ்டர் திருப்பலியை, பங்குத் தந்தையுடன் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலியில், பேசாலை உட்பட அயல் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலய உயிர்த்த ஞாயிறு ஆராதனை, சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் றொசான் மகேசன் தலைமையில் நடைபெற்றது. அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் நல்லாசி வேண்டியும், நாட்டு மக்கள் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்க வேண்டியும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று காலை இடம்பெற்ற இவ்வழிபாடுகளுக்காக விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பெருமளவான மக்களின் பங்களிப்புடன் சீயோன் தேவாலய உயிர்த்த ஞாயிறு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாடுகளின் இறுதியில் போதகர்களும் அடியார்களும் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், ஆராதனையில் கலந்துகொண்ட சிறார்களால் உயிர்த்த ஞாயிறு சிறப்பு நாடக நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
