உரிய அனுமதியின்றி இறக்குமதிசெய்யப்பட்ட இறைச்சி வகைகள்

0
198

கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெறவிருந்த 10 நாள் உணவுக் கண்காட்சியில் வைப்பதற்காக உரிய அனுமதியின்றி இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக்கு சுகாதார திணைக்களம் கைப்பற்றியுள்ளது . 

இலங்கை சுகாதாரத் துறையின் முறையான அனுமதி இல்லாமை, இறைச்சியை வழங்கிய இங்கிலாந்து நிறுவனத்தின் உறுதிப்படுத்தும் சான்றிதழ் இல்லாமை போன்ற காரணங்களினால் குறித்த இறைச்சி வகைகளை கண்காட்சிக்கு வைப்பதற்கு சுகாதார திணைக்களம் மறுத்துள்ளது.

இந்த இறைச்சி வகைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடியும் வரை இறைச்சியை பயன்படுத்த வேண்டாம்  எனவும் சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான அறிக்கை அடுத்த சில நாட்களில் வழங்கப்படும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர  தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பன்றி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி வகைகளை  அழிக்க சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .