RAMIS மற்றும் Legacy கணினிக் கட்டமைப்புக்கு அமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 டிசம்பர் 31ஆம் திகதி வரை கிடைக்க வேண்டிய நிலுவையான வரி, தண்டப்பணம் மற்றும் வட்டியின் பெறுமதி 904,342,180,778 ரூபா (ரூ.904 பில்லியன்) என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது.
இந்தத் தொகையில் 163,425,093,401 ரூபா (163 பில்லியன்) வசூலிக்கப்படக் கூடிய வருமானங்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், 740,917,087,377 ரூபா (740பில்லியன்) ஒரு சில காரணங்களால் இவற்றை வசூலிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தொகையாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.
அத்துடன், RAMIS மற்றும் Legacy ஆகிய கட்டமைப்புக்கள் இரண்டின் கீழும் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த நிலுவை வரித்தொகை அடையாளம் காணப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இந்த நிலுவைத் தொகையில் வசூலிக்கக்கூடிய வருமானத் தொகையை வசூலிக்காமல் இருப்பதும் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
வசூலிக்கப்பட வேண்டியுள்ள வருமானம் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலுவைத் தொகையை பகுதிகளாக அல்லது வசூலிக்கப்படும் முறை, அதற்கான திகதிகள் உள்ளடங்கிய தகவல்களுடன் கூடிய அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழுவின்) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், 904 பில்லியன் ரூபா வரி நிலுவை குறித்தும், வரி ஏய்ப்பு செய்யப்பட்ட விதம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் தனியான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
2022ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும்நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் தெரியவந்தன.
மேலும் RAMIS கணினிக் கட்டமைப்பு அமைப்பு முறையான செயல்பாட்டில் இல்லைஎன்பது குறித்தும், அது அமைக்கப்பட்டவுடன் அதை இயக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே அதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு குறிப்பிடப்பட்டது.
அத்துடன், 2022 நவம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற கோபா குழுவில் கலந்துரையாடப்பட்டதற்கு அமைய 2022 யூன் 30ஆம் திகதி வரையில் 2,488,0036,615 ரூபா (2.4 பில்லியன்) பெறுமதியான 4831 காசோலைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
90 வீதமான வரிப்பணம் இலங்கை வங்கியின் ஊடாகவே செலுத்தப்படுவதாகவும், வரி செலுத்திய அன்றே வரி செலுத்துவதற்கு அனுமதி கிடைத்தாலும் மறுநாள் நிராகரிக்கப்பட்ட காசோலையாக அவை காட்டப்பட்டதாகவும் இங்கு வந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழுவின் தலைவர் இலங்கை வங்கியின் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.அத்துடன் கசினோ வணிகத்திற்கான மொத்த வசூல் மீதான வரிவிதிப்பு பற்றிய கலந்துரையாடலும் இங்கு இடம்பெற்றது.