எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.அதன்படி வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி சுமார் 250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதேவேளை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வழக்கின் விசாரணைக்குப் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையேஇ உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் குறித்த மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் பிரதிகளை அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவற்றை உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்குச் சமர்ப்பிக்குமாறு அந்த ஆணைக்குழு அரசியல் கட்சி செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களைக் கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் நடைபெறும் உள்ளூராட்சி மன்றங்களின் சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படாதது குறித்துத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கவலை வெளியிட்டிருந்தமை தொடர்பில் எமது செய்திச் சேவை வெளிப்படுத்தியிருந்த பின்னணியில் குறித்த அறிவிப்பு வெளியானமை குறிப்பிடத்தக்கது.