2023 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, ரணில் விக்ரமசிங்க பறித்துக் கொண்டதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ரூபாவாக உள்ளது. எனினும், மக்கள் தொடர்பில் அக்கறையில்லாத கடந்த ஆட்சியாளர்களால் அந்த பணம் முறையாகச் செலவிடப்படவில்லை. அந்த நகர சபை, திருடர்களின் கூடாரமாகவே இருந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி பெறும் வாய்ப்பு கிட்டியிருந்த போது, ரணில் விக்ரமசிங்க தேர்தலைப் பறித்துக் கொண்டார். எவ்வாறாயினும், இந்த முறை தங்களது வெற்றி வாய்ப்பை எவராலும் தட்டிப் பறிக்க முடியாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.