எரிபொருளை இறக்கிக்கொள்வதற்கு 36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லை. அத்துடன் வேஸ்ட்கோஸ்ட் மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் 300 மெகவாட் உற்பத்தியை இடைநிறுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி எரிசக்தி நெருக்கடியாக மாறும் என்பதை நாம் ஏற்கெனவே தெளிவாகக் கூறியிருந்தோம்.
கடந்த டிசெம்பர் மாதம் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்தே காணப்பட்டது. ஆறு வாரங்கள் தொடர்ந்தால் மின்வெட்டுக்கு செல்ல நேரிடும். அதேபோன்று, நிதி நெருக்கடி காணப்படுவதால் எரிபொருள் நெருக்கடிக்கும் செல்ல நேரிடும்.
37,500 மெட்ரிக் தொன் கொள்ளளவுடைய டீசலுடன் கப்பல் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை இன்மை காரணமாக, துறைமுகத்துக்கு வந்துள்ள அந்த கப்பல், டீசலை இறக்கும் முன்னர் பணத்தை கோரியுள்ளது. அரச வங்கிகள், 31 மில்லியன் டொலரை வழங்குவதற்கு தவறிவிட்டன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கடன் வழங்க வேண்டாம் என்று, அரச வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்கிகள் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளன. குறிப்பாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளன. நாடு தற்போது எவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது என்பது இதற்கூடாக நன்கு புலப்படுகின்றது.
36 மில்லியன் டொலர் இல்லாததால் தற்போது நாட்டு மக்களுக்கு போக்குவரத்து உரிமையும் மின்சார உரிமையும் இல்லாமல் போய்விட்டது.
நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.