விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னர் விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்திருந்த மூவரை, நுகர்வோர் அதிகார சபையின் இரத்தினபுரி காரியாலய அதிகாரிகள் இன்று(16) கைதுசெய்துள்ளனர்.
இரத்தினபுரி குருவிட்ட நாலந்த பிரதேசத்தில், எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் நிலையத்தைச் சேர்ந்த மூவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிலையத்தின் களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 1,875 எரிவாயு சிலிண்டர்களை அதிகாரிகள் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்தினபுரியில் அண்மைக்காலமாக 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பிலேயே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.