எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்

0
158

எரிவாயுக்களில் உள்ளடக்கப்பட வேண்டிய மூலப்பொருட்கள் தொடர்பிலான வர்த்தமானியை உடனடியாக வெளியிடுமாறும் அதேபோன்று எரிவாயு வெடிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், நுகர்வோர் அதிகார சபையில் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழங்கிய கடிதத்தை, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நளின் பண்டார, இம்ரான் மஹ்ரூப் ஆகியோர்; அடங்கிய குழுவினர் நுகர்வோர் அதிகார சபையில் இன்று கையளித்தனர்.

இதன்போது கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் வேண்டுகோள் ஒன்றை முன்வைப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வருகை தந்தோம்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடிதம் ஒன்றை கையளிக்குமாறு எமது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்திருந்தார்.

நாட்டில் கடந்த காலங்களில் எரிவாயுக்களின் மூலப்பொருட்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் பாரிய சேதங்கள், உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.

எரிவாயு சிலிண்டர்களின் மூலப் பொருட்கள் மாற்றப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. தற்போது அந்தக் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

எரிவாயு மூலப்பொருட்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாகவே எரிவாயு தொடர்பிலான விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, அந்தக் குழு மிகவும் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எரிவாயு வெடிப்புச் சம்பவங்களால் இதுவரை ஏழு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன. வியாபார நிலையங்களும் சேதமடைந்துள்ளன.

இதற்கெதிராக நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தோம். எனினும் குற்றப்புலனாய்வு திணைக்களம் அதற்கெதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்துக்கு முன்கொண்டு வருவதில் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது தெளிவாகின்றது.

எரிவாயுக்களில் மூலப்பொருட்களை மாற்றிய விடயத்தில் அரசியல்வாதிகள் இருப்பது தெரியவருகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் தரத்தை பரிசோதித்து அதனை வெளிப்படுத்தும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபைக்கே உள்ளது.

எரிவாயு சிலிண்டருக்கு பொருத்த வேண்டிய குழாய் மற்றும் ரெகியுலேட்டரின் தரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எனினும் எரிவாயுவில் உள்ளடகப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. எனவே உடனடியாக அதனை அந்த அறிவித்தலை வெளியிடுமாறே நாம் கோருகின்றோம்.

அதற்கன அதிகாரம் நுகர்வோர் அதிகார சபைக்கே உண்டு.

அதேபோன்று எரிவாயு வெடிப்பச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் அதிகாரமும் நுகர்வோர் அதிகார சபைக்கே உண்டு.

அந்த அதிகாரித்தை பயன்படுத்த தவறும் பட்சத்தில் நுக்வோர் அதிகார சபைக்கு எதிராக நாம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.

நுகர்வோர் தொடர்பில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகார சபை தவறும் பட்சத்தில் அதற்கெதிராக நீதமன்றத்தை நாம் நாடி செல்வோம் என்பதை நினைவூட்டுவதற்காகவே நாம் இன்று எமது பொதுச் செயலாளரின் கடிதத்தை எடுத்துக்கொண்டு நுகர்வோர் அதிகார சபைக்கு வருகைதந்தோம்.