ஏறாவூர் கூட்டுறவுச்சங்கத்தின் பணியாளர்களுக்கு இலாபத்தில் பங்கு பணம் வழங்குதல் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு

0
156

மட்டக்களப்பு – ஏறாவூர் கூட்டுறவுச்சங்கத்தின் பணியாளர்களுக்கு இலாபத்தில் பங்கு பணம் வழங்குதல் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வும் கூட்டுறவுச் சங்க வைத்தியசாலைக்கட்டத்தில் நடைபெற்றது.சங்கத்தலைவர் எம்எல் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் என். சிவலிங்கம் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.

மாவட்ட உதவி ஆணையாளர் கேவி. தங்கவேல் , சங்கத்தின் பணிப்பாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.கூட்டுறவுச்சங்கத்தின் பணியாளர்கள் இதன்போது சீருடைகளையும் பணத்தினையும் பெற்றுக்கொண்டனர்.சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக சிறப்பாக ,இயங்கி மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்திலும் விருதுகளைப்பெற்றுள்ள இச்சங்கத்தில் தற்போது ஐம்பத்தெட்டுப்பேர் பணியாற்றுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியாக இலாபத்தில் இயங்கிவரும் இச்சங்கம் சுமார் முப்பது வருடகாலமாக அதன் பணியாளர்களுக்கு இலாபத்தில் பங்கினை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்க் கூட்டுறவுச் சங்கத்தின்கீழ் வைத்தியசாலை, எரிபொருள் நிரப்பு நிலையம், நுகர்ச்சிப்பிரிவு, வாகன சுத்திகரிப்பு நிலையம், அரிசி ஆலை மற்றும் மினி ஆடைத்தொழிற்சாலை என்பனவும் இயங்கிவருகின்றன.

எதிர்காலத்தில் கலியாண மண்டபம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கத் உத்தேசித்துள்ளதாக உப தலைவர் எம்பிஎம்ஏ. சக்கூர் தெரிவித்தார்.