கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சிறைச்சாலை அதிகாரி விளக்கமறியலில்!

0
5

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறைச்சாலை அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்றிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

காலி அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பூஸா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலை அதிகாரி சம்பவத்தன்று, கணேமுல்ல சஞ்சீவவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்துச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகளை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை தொடர்பில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.