மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாவிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மற்றும் மரங்களை வெட்டிய ஆறுபேர் கரடியனாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய மூன்று டிப்பர் வண்டிகள், இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஜேசீபி இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்களுள் சிலர் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்ந்துள்ளனர். மேலும் சிலர் அனுமதிப்பத்திர விதிமுறைகளுக்கு முரணாக மணல் அகழ்ந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்விற்காக காட்டுவழியாக வாகனங்களைக் கொண்டுசெல்லும் நோக்குடன் பனைமரங்களை வெட்டி அழித்து குறுக்குப்பாதை அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசீபி இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமரகோன் தெரிவித்தார்.
சந்தேகநபர்களான வாகனங்களின் சாரதிகள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் கூறினர்.