பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மாநகர பிரதான வீதியால் நேற்று மாலை சந்தேக நபர் வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப்
பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற கல்முனை பொலிஸார்
குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இரும்பு சேகரித்து விற்பனை செய்பவர் எனவும் குறித்த நபர் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் இருந்து இவ்வாறு 590 போதைமாத்திரைகளை கடத்தி வந்து பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்துள்ளதாக விசாரரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் போதை மாத்திரைகளை கடத்த பயன்படுத்திய வட்டா ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.