கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தம்

0
119

அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகர சபையின் பொறியியல் பகுதி
தொழிலாளர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கனமழை ஓய்ந்திருக்கின்ற போதும், குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், குளங்களை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்
அச்சமடைந்துள்ளனர்.
சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் வழிகாட்டலில், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸியின்
நெறிப்படுத்தலில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
வெள்ளம் கடலோடு கலப்பதற்கு ஏற்ற வகையில், முகத்துவாரங்கள் வெட்டப்பட்டும், வடிகான்கள் மற்றும் தோணாக்களில் காணப்படும் தடைகளும் கனரக வாகனங்களின்
உதவியுடன், மாநகரசபை தொழிலாளர்களால் இரவு பகலாக அகற்றப்படுகின்றன.
இப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலேயே, கல்முனை மாநகர சபையின் பொறியியல் பகுதி தொழிலாளர்களின் விடுமுறைகள் கால வரையறையின்றி
இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.