தமிழர் பகுதிகளில் யானைகளின் அட்டகாசங்களை தடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காத நிலையே காணப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமுலயடிவட்டை பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டபோதிலும் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் அசமந்தமான செயற்பாடுகளையே முன்னெடுத்ததாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நேற்று அதிகாலை தனது அக்காவின் வீட்டிலிருந்து வயல்
பூமியின் குத்தகை பணத்தினை செலுத்துவதற்காக ஆணைகட்டியவெளி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை வீதியில் நின்ற யானை துரத்தி அடித்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி யோகநாதன் வயது 53 என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இடம்பெற்று வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவித்திருந்தும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் காலை 10 மணி கடந்தும் வருகைதரவில்லை என குற்றம் சுமத்தியுள்ள பொது மக்கள் பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்கப்படும் ஒத்துழைப்புக்கள் தமக்கு வழங்கப்படுவதில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
போரதீவுப்பற்றில் யானைகளின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையேற்படும் எனவும் தெரிவித்துள்ள மக்கள் தற்போது போரதீவுப்பற்று பகுதியில் சிறுபோக அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருவதாகவும் அவற்றினை தடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.