‘காலி கலந்துரையாடல் 2023’ சர்வதேச மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலி ஜெட்வின் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானது.
இம்முறை ‘இந்து சமுத்திரத்தில் உருவாகும் புதிய ஒழுங்கு முறை’ எனும் தொனிப்பொருளின் கீழ் 11 சர்வதேச அமைப்புகள் மற்றும் 44 நாடுகளின் சமுத்திரவியல் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை பிரதானிகளின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நேற்று ஆரம்பமானது.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதன் அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக,
2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலி கலந்துரையாடல் சமுத்திரவியல் மாநாடு இம்முறை 11வது தடவையாக இடம்பெறுகின்றது.
இதனூடாக வலயத்தினதும் உலகத்தினதும் தலைவர்களை ஒரே மேடைக்கு வரவழைத்து கடற்படை, சுற்றாடல், சமுத்திர மற்றும் அரசியல் கலந்துரையாடல்களை ஏற்படுத்தல் மற்றும் உலக பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைத்த பின்னர் நடத்தப்படும் முதலாவது மாநாடாக இது அமைந்திருக்கிறது.
நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தென் மாகாண ஆளுநர் விலி கமகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.