விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கிம்புலாலே குணா உள்ளிட்ட இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுப்பட்ட குழுவிற்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான குற்றப்பத்திரிகைகள் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குழுவில் கிம்புலாலே குணா என அழைக்கப்படும் குணசேகரன், புகுடுகன்னா என்றழைக்கப்படும் புஷ்பராஜா மெஹமட் அஸ்மின், சுனில் காமினி பொன்சேகா, ஸ்டென்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுக ரொஷான், வெல்லே சுரங்க, தனரத்ன நிலுக்ஷன், மற்றும் திலிபன் ஆகிய 10 இலங்கையர்கள் உள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவை மையமாக கொண்டு நீண்டகாலமாக சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் வா்த்தகத்தில் ஈடுப்பட்டதாக அடையாளங்காணப்பட்ட இவர்கள் கடந்த வருடம் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் ஹாஜி சலீம் என்ற கடத்தல்காரனுடன் கிம்புலாலே குணாவின் குழு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கு பணம் வழங்குவதற்கு செயற்பட்டதாகவும் , கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதாகவும் இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் சமா்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் கையடக்க தொலைபேசிகள், சிம்கார்டுகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள், பணம், தங்கம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.