
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை களஞ்சியப்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தானியக் களஞ்சியசாலை தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் தானியக் களஞ்சியசாலையின் தற்போதைய செயற்பாடுகள், கட்டண அதிகரிப்பு நடைமுறைகள், அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் அலுவலக தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த தானியக் களஞ்சியசாலையின் தற்போது 700 மெற்றிக்தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் கீழ் இத் தானியக் களஞ்சியசாலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், நிதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தயானந் இணையவழி செயலி ஊடாக கலந்து கொண்டிருந்தார்.
மேலும் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், நெல் சந்தைப்படுத்தல் சபை முகாமையாளர், கரைச்சி பிரதேச செயலாளர், தானியக் களஞ்சியசாலை முகாமையாளர், பொறியியலாளர், பிராந்திய அபிவிருத்தி வங்கி முகாமையாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளன தலைவர் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரடியாக கலந்து கொண்டனர்.