அம்பாறை மாவட்டம் காரைதீவில் பயணத்தடைகளை மீறி வீதியில் அநாவசியமாக நடமாடியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பயணத்தடை விதிக்கப்பட்ட காலத்தில் இருந்து நேற்றைய தினம் இரவு வரை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 75 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இதில் இளைஞர் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.


அவருக்கு தொற்று உறுதிப்படுத்தியதை அடுத்து தொற்றாளரின் குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குடும்பத்தினருக்கு தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப், தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர், இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது வீதியில் நடமாடியோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள், மீனவர்கள், என பலருக்கு அன்டீஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.