மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படும், தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை இன்று நடாத்தப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடமாடும் சேவை நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை தந்த மக்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
45 வருட காலமாக தீர்க்கப்படாத ஏறாவூர் நகர சபைக்கு உட்பட்ட கடைத் தொகுதி பிரச்சினைக்கான தீர்வு ஆளுநரினால் வழங்கப்பட்டதோடு கடைகளின் உரிமையாளர்களுக்கு வர்த்தக நிலையங்களைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தசுதர்ஷினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மாகாண பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்கள் என பலரும் நடமாடும் சேவையில் கலந்துகொண்டனர்.
ஆளுநரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் பரிந்துரைக்கப்படவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான கொடுப்பணவுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.