டுபாயில் தலைமறைவாகியுள்ள கெசல்பத்தர பத்மே என்ற திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் தலைமையில் முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று இயங்கிவருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பின்னர் வெளியாகிய தகவல்களையடுத்து, இராணுவத்திலிருந்து விலகி, குற்றக் குழுக்களுடன் இணைந்த சில கமாண்டோ உறுப்பினர்கள் செய்த கொலைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமை தொடர்பில் கமாண்டோ சமிந்து என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் டுபாயில் தலைமறைவாகியுள்ள கெசல்பத்தர பத்மேவின் குற்றக் குழுவுடன் தொடர்புடைய மாலைதீவுகளிலுள்ள கமாண்டோ சலிந்து என்பவரால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கமாண்டோ சலிந்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ளும் நபரைத் தேர்ந்தெடுக்கும் பணியை யோ யோ எனப்படும் கமாண்டோ யொஹானிடம் ஒப்படைத்திருந்தார்.
கொலை சம்பத்தின் பின்னணியிலிருந்த சூத்திரதாரியான இஷார செவ்வந்தியின் தொலைபேசி தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், யோ யோ என்ற நபர் கமாண்டோ சமிந்துவைத் தொடர்பு கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தற்போது பணியாற்றிவரும் பல கமாண்டோ உறுப்பினர்கள் மற்றும் சேவையிலிருந்து தப்பியோடிய படையினரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.