கெஹலியவினால் விசேட சிகிச்சை கோரப்படவில்லை

0
73
முன்னாள் சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுமாறும், சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை வழங்குமாறும் கோரியுள்ளதாக பரவலான ஊகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், அவர் அவ்வாறான விசேட சிகிச்சைகளை நாடவில்லை அல்லது பெற்றுக்கொள்ளவில்லை என சிறைச்சாலை வைத்தியசாலை தெரிவித்துள்ளது.சிறைச்சாலை வைத்தியசாலையில் தம்மைக் காவலில் வைப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் முறைப்பாடுகள் அல்லது விசேட கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கவில்லை எனவும், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உடல்நல பிரச்சினை களுக்கு ஏனைய கைதிகளை போலவே சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அப்படி செய்வதற்கு எந்த நடைமுறையும் இல்லை என்று தெரிவித்த அவர், “இவை உண்மைக்குப் புறம்பான கூற்றுகள். உண்மையில், கைதியை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் நடைமுறை இல்லை. எவ்வாறாயினும், ஒருவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது கைது செய்யப்பட்டால், அவ்வாறான சந்தர்ப்பங்களில், அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விடுவிக்க முடியுமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்த வைத்தியசாலையின் விசேட வைத்தியருக்கு உண்டு. சில காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து வேறு வைத்தியசாலைக்கு கைதிகள் மாற்றப்பட வேண்டுமாயின் அவர்கள் தேசிய வைத்தியசாலைக்கு மாத்திரமே மாற்றப்படுவார்கள்” என்றார்.
முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் போன்ற விசேட சிகிச்சைகளை அவர் நாடியதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். சிறை மருத்துவமனையில் அவருக்கு ‘மிக முக்கியமான நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை’ அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.