பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொரோனா தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவைப் பெற்றுத்தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மருத்துவர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு இத்தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உறுதியளிக்க முடியும் என பிரதமருடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.
´இந்தச் சவால் மிகுந்த காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவு வழங்க மிகுந்த கடப்பாடு காணப்படுகிறது என ஹனா சிங்கர் குறிப்பிட்டார்.
பெருந்தொகையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும்போது அவற்றை கிடைத்தவுடன் பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கு இலங்கையின் அணுகுமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் இடையே இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.
´பல நாடுகளில் கொரோனா தொற்று ஆபத்து இரண்டாவது அலை நிலவி வருகிறது´ எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தத் தொற்றை இல்லாதொழிக்க ஒரே வழி தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதே எனவும் தெரிவித்தார்.
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் கொரோனா நோயறிதலுக்கான அணுகலை விரைவுபடுத்த “ACT-Accelerator” எனும் பெயரில் உலகளாவிய கூட்டாட்சியொன்று உருவாக்கப்பட்டது.
COVAX வசதியின் கீழ் கொவிட்-19 நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி தயாரிப்பிற்கேற்ப தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் அணுகுமுறையை துரிதப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த நாடுகளின் மக்கள்தொகையில் குறைந்தது 20 வீதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்படும். ஆரம்பத்தில் ஆபத்து மிகுந்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி வழங்கும் செயல்பாடு மற்றும் பொதுமக்களை இதுதொடர்பில் தெளிவுபடுத்துதல் என்பவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் சுட்டிக்காட்டிய டிம் சுடன், முதல்கட்ட தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்கனவே ஆதரவு வழங்கியிருப்பதுடன், 20 வீதம் என்ற இலக்கை விட அதிகமான தடுப்பூசிகளை வழங்க அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர் பிரதமரிடம் கூறினார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பில் விளக்கமளித்த மருத்துவர் பெண்டிசே, தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் சமூகமயப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
´இது ஒரு புதிய தடுப்பூசி´ எனக் குறிப்பிட்ட பெண்டிசே, ´அது மக்கள் உயிரிழப்பதிலிருந்து பாதுகாக்கும். எனினும், அது பரவலை எந்தளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பது தொடர்பில் உறுதியாகக் கூறமுடியாது´ எனத் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பின்னரும் இத்தொற்று தொடர்பில் எவரும் அலட்சியமாகச் செயல்பட முடியாது என இந்தக் கலந்துரையாடலின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆய்வு தொடர்ந்து செயல்படுத்தப்படுவதுடன், தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு காலத்துக்குச் செல்லுபடியாகும் என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இதற்கமைய தடுப்பூசி மூலம் உடலிலுள்ள வைரஸ் முற்றாக அழிக்கப்படுமா? அல்லது வைரஸின் தாக்கம் குறைக்கப்படுமா? என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
தாக்கத்தைக் குறைக்கும் செயல்பாடு மாத்திரம் இடம்பெறுமாயின் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரொருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றுப் பரவும் வாய்ப்புள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணல் ஆகியவை தொடர்பில் மக்கள் கவனத்தில் கொண்டு செயல்படல் வேண்டும்- என்று அறிவுறுத்தினர்.