தற்போது சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் விற்பனையானது. எனினும், தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோதுமை மாவுக்கு நிர்ணய விலையொன்றை அறிவிக்குமாறு வெதுப்பக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புறக்கோட்டை மொத்த சந்தையில் 290 முதல் 295 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில், ஒரு கிலோகிராம் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லும் போது, ஒரு கிலோகிராம் கோதுமை மா 360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சிலர் கறுப்பு சந்தையில், அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கோதுமை மா விலை நிர்ணய விலையின்றி, விற்பனை செய்யப்படுவதால் தமது தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக ஏற்கனவே கோரியுள்ள நாடுகளுக்கு மாத்திரம், கோதுமை மாவினை ஏற்றுமதி செய்யவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தற்காலிக தடை என, அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதிக்கான தடை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 10 மில்லியன் தொன் கோதுமை மாவினை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.