சட்டமூலம் தொடர்பாக விமர்சிப்பவர்கள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய முறை தொடர்பாக தெரிவிக்க வேண்டும் – நீதி அமைச்சர்

0
64

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுவது பிற்போடப்பட்டது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் இறுதிவாரம் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே இதற்கான வரைபுகள் தயாரிக்கப்பட்டன.

மே மாதத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு பார்க்கின்றோம்.

ஏப்ரல் 25ஆம் திகதி சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த சட்டமூலமானது தொழிற்சங்கங்களுக்கு பாதகமாக அமைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

எம்மைவிட அமெரிக்காவிலுள்ள சட்டமூலமானது மிகயும் பயங்கரமானதாகக் காணப்படுகின்றது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பொலிஸார் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

மக்கள் தொகையை பார்க்கும்போது தொழிற்சங்கங்கள் 1 சதவீதமே காணப்படுகின்றன.

உயிர்த்த ஞாயிற்று தற்கொலை தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுப்பது இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தவிர்க்கப்ப்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதாகக் கூறினாலும் இதன் வரைபானது 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே உருவாக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பாக விமர்சிப்பவர்கள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய முறை தொடர்பாக தெரிவிக்க வேண்டும்.

எனவே மே மாதத்தில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதிக பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வோம்.

மக்களை வென்றெடுக்க வேண்டும். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.