இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டு, சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், சுகயீனம் காரணமாக மரணித்த சாந்தனின் புகழுடல் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகிறது.
இன்று காலை அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டு, வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாங்குளம் மற்றும் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல், நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.