சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாட ஆர்வம் காட்டாத கிளிநொச்சி மக்கள்!

0
175

கிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுவதிலோ அல்லது புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதிலோ மக்கள் ஆர்வம் காட்டவில்லை என நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள, தமிழ் புத்தாண்டு மலரவுள்ள நிலையில் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

குறிப்பாக பொருட்களின் விலையேற்றம், தொழில் வாய்ப்பின்மை என பல்வேறு காரணங்களால் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் கடந்த காலங்களைப் போன்று புத்தாண்டு வியாபாரம் களை கட்டவில்லை என்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் குறிப்பாக அதிகரித்த வரிச்சுமை மற்றும் மின்சார கட்டண அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக கூடுதலான முதலீடுகளை செய்து ஆடைகளை கொள்வனவு செய்தாலும் அவற்றை விற்பனை செய்வது மிகக் கடினமாக இருப்பதாகவும் கடந்த காலங்களைப் போல் எதிர்பார்த்த எந்த வியாபாரமும் இம்முறை நடைபெறவில்லை எனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.