சிறுவர்கள் மீதான வன்முறை தொடர்பாக 8,746 முறைப்பாடுகள் பதிவு

0
44

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

அவற்றில் 580 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை எனவும், 321 முறைப்பாடுகள் சிறுவர் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

அவற்றில் சிறுவர்களின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக 2,746 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் 1,950 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சிறுவர்களை யாசகம் பெறுவதற்காகப் பயன்படுத்தியமை தொடர்பில் 229 முறைப்பாடுகளும் வர்த்தக நோக்கங்களுக்காகச் சிறுவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் 25 முறைப்பாடுகளும், சிறுவர் திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. 

துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ஆதரவை வழங்கும் முயற்சியில், இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த சட்டத்தரணிகள் குழுவை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இதற்காக, துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாக விரும்பும் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளிடம் இருந்து விண்ணப்பங்களை அந்த அதிகாரசபை கோரியுள்ளது.