சிவனொளிபாத மலை யாத்திரையின் போது ஹட்டன், நல்லதண்ணி ஊடாக போதைப்பொருள் கொண்டு வரும் யாத்திரிகர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் பிரிவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஹட்டன் பொலிஸ்பிரிவைச் சேர்ந்த ஸ்டூவர்ட் என்ற போதைப்பொருள் தொடர்பில் விஷேட பயிற்சி பெற்ற மோப்ப நாயைப் பயன்படுத்தி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பொலிஸ் வீதித் தடை வழியாக சிவனொளிபாதமலைக்கு சென்ற பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை சோதனையிட்ட போது கஞ்சா மற்றும் சட்டவிரோதமான முறையில் புகைத்தல் பொருட்களை வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 20 க்கும் 30க்கும் இடைப்பட்ட அகவைகளை கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.