சிவராத்திரி விரத புண்ணியகாலத்தில் ஆன்மீக செயற்பாடுகளுக்கு ஊக்கம் நல்கும் வகையில் கௌரவ பிரதமரின் பணிப்புரைக்கமைய சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கபடவுள்ளது
சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு சிவராத்திரி தினமான எதிர்வரும் (01.03.2022) அன்று ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இளம் இந்துச் சிறார்களின் ஆன்மீக உணர்வுகளை மேன்மையுறச் செய்து, கலை நிகழ்வுகள் மூலமாக ஆக்கத்திறன் ஆளுமைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதோடு, மேன்மேலும் அவர்களுக்கு ஊக்கம் நல்கும் விதத்தில் பரிசில்கள் வழங்கிப் பாராட்டுதல் என்ற முக்கிய நோக்கத்தினை உடையதாகவே, மகாசிவராத்திரி விரத புண்ணிய நன்னாளை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.