சீரற்ற காலநிலை : கிளிநொச்சியில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்

0
229

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில், அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடனான அவசர கலந்துரையாடல், மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், இன்று இடம்பெற்றது.

இதில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர், வலயக் கல்வி பணிப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

அதிக மழை காரணமாக, இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 34 அடியாக உயர்ந்த நிலையில், 14 வான் கதவுகள் திறக்கப்பட்டு, குளத்தின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்யுமானால், குளத்தை அண்டிய பகுதிகள் மற்றும் நீர்வரத்து பகுதிகளில் இருக்கும் மக்கள், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக, 394 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு, பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் என, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.