சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சுங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், இலங்கையின் சுகாதார சேவை மற்றும் ஊடகத்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறையின் எதிர்கால அபிவிருத்திக்காக அமெரிக்க அரசாங்கம் வழங்கும் உதவிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையில் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கும் தற்போதைய அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் உள்ளுர் மருத்துவத் துறையின் முன்னணி சுகாதார சேவையை ஆயுர்வேதத்துடன் இணைத்து சுற்றுலா வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கான சுகாதார சுற்றுலா வர்த்தக திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இலங்கையில் சில சூழ்நிலைகளில் ஏற்படும் மருந்துப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில், இலங்கையிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் அரச ஆதரவுடன் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை விரைவில் தொடங்குவதற்கான திட்டங்கள் தயாராகி வருவதாக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்தார்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் முன்வைத்த கருத்துக்களை செவிமடுத்த அமெரிக்க தூதுவர், இலங்கையின் இலவச சுகாதார சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தினார்.
குறைந்த செலவில் வழங்கப்படும் இந்த சேவையானது உயர்தரத்தில் வழங்கப்படுவதாகவும், இலங்கையில் தற்போது நிலவும் சுகாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து அமெரிக்க தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருமதி ஜூலி ஜே.சாங், கடந்த காலங்களில் சுகாதார அமைச்சுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் இலங்கையின் சுகாதார சேவையின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்கியதாகவும் நினைவு கூர்ந்தார்.
அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே.சுங், அமெரிக்க அரசாங்கம் நிதி, தொழில்நுட்ப அறிவு ரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதோடு, இந்நாட்டில் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளில் மேலும் மேம்பாட்டைக் கொண்டுவர உதவும் என்று தெரிவித்தார்.
“தூய்மையான இலங்கை” திட்டத்தின் கீழ் தற்போதைய அரசாங்கத்தின் தலைமையிலான புதிய வேலைத்திட்டம் இங்கு சிறப்புப் பாராட்டைப் பெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார ஆலோசகர் ஹெய்டி ஹட்டன்பேக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.