தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் தொடர்பாகவும், சுகாதாரத் துறையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை மற்றும் லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாகவும் சுகாதார அமைச்சதுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் இடமாற்றம் சம்பந்தமாகவும், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மருத்துவ மற்றும் மருத்துவர் பற்றாக்குறை அத்தோடு நோயாளர் காவு வண்டி நோயாளர் ஒருவரை இலகுவாக வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் முறை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறந்த சுகாதார பொறிமுறைகளை உருவாக்குவது மட்டுமல்லாது ஏனைய பகுதிகளிலும் விசேட திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, விரைவில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சுக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் சுகாதார மேம்பாட்டுக்கான குழு ஒன்றை அமைத்து அதனூடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் இலவசமாக வழங்கப்படும் திரிபோஷா சத்துணவு முறையாக வழங்குவது தொடர்பாகவும் சுகாதார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன், பிரஜாசக்கி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.