மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலாமடு பிரதேசத்தில் செங்கல்சூளை சரிந்து வீழ்ந்ததில் செங்கல்சூளையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

பன்குடாவெளி-பாலர்சேனை பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய முத்தன் தர்மராசா என்பவரே சம்பவத்தில் உயரிந்தவராவார்.

நீண்டகாலமாக செங்கல் உற்பத்திசெய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்த இவர் செங்கல்சூளையை சீர்செய்துகொண்டிருந்தபோது ஆறு அடுக்குகள் சரிந்து இவர் மீது வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தலையில் காயமடைந்த குறித்த நபர் செங்கலடியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வீடுதிரும்பியிருந்தார்.

இதனை அடுத்து சற்றுநேரத்தில் நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்பட்டதை அடுத்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலமணி நேரத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

இதன்பின்னர் சடலம் பீ.சி.ஆர் மற்றும் பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கரடியனாறு பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.