ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகளை மியான்மாரில் உள்ள சைபர் க்ரைம் முகாம்களுக்குக் குழுக்கள் குழுக்களாக அனுப்புவது தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
அண்மைக் காலமாக அதிகளவான இலங்கையர்கள் குறித்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அதிக கணினி அறிவு உள்ளவர்களை அதிக சம்பளம் வழங்குவதாகவும் வேறு நாடுகளில் வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றமை தெரியவந்துள்ளது.
சிலர் துபாய் போன்ற நாடுகளுக்கு வேலைக்கான நேர்காணல் என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டுஇ மியான்மாரில் உள்ள சைபர் க்ரைம் முகாம்களில் சட்டவிரோதமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே வெளிநாடுகளுக்குச் செல்லும் பட்சத்தில் அனைவரும் சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேகத்திற்கிடமான ஏதேனும் தகவல் தெரிந்தால் 0112102570, 076 844 7700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது nahttfsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.