ஜனாதிபதித் தேர்தல் நிதி வழங்குவது அரசின் பொறுப்பு: பவ்ரல்

0
91

‘நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மற்றும் நிவாரணங்களுக்காக அரசாங்கம் பல பில்லியன் ரூபாவை செலவு செய்து வருகிறது.
அதனால், தேர்தலுக்கு நிதிச் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி தற்போது வரையில், பாராளுமன்றத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எனவே, நிதி இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தேர்தல் ஆணைக்குழு கேள்வி எழுப்புவதற்கான எந்த அவசியமும் இல்லை’ என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் இதுவரையில் பல்வேறு தீர்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளது. இருந்தபோதும், தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் தேர்தலை நடத்துவதற்கு இடையூராக இருக்குமென நாங்கள் நம்பவில்லை.
தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏராளமான முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளும் எங்களிடம் இருக்கின்றன.
அதேபோன்று, இன்னும் இரு தினங்களில் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துவிடும். எனவே, எதிர்வரும் இருதினங்களின் பின்னர் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம். அதேபோன்று அரசியலமைப்பினூடாக அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
அத்துடன், தேர்தலை நடத்துவதற்கான நிதி இருக்கிறதா என்பது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு, அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இருந்தபோதும், நிதி இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கான எந்த அவசியமும் இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி தற்போது வரையில், அரசியலமைப்பின் அடிப்படையில் பாராளுமன்றத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதேபோன்று, நெடுஞ்சாலை அபிவிருத்தி, பாலம் மற்றும் வடிகாலமைப்பு திருத்தப் பணிகள், நிவாரண கொடுப்பனவுகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக அரசாங்கம் பல பில்லியன் ரூபாவை செலவு செய்து வருகிறது. அதனால், தேர்தலுக்காக நிதி சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
அதேபோன்று, உத்தியோகபூர்வமாக தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத சந்தர்ப்பத்திலும் கூட, அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துகளை தேர்தல் செயற்பாடுகளுக்காக பாரதூரமான வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அரச அதிகாரிகள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் இதற்கு ஒத்துழைக்கு வழங்காவிட்டால் அரச அதிகாரம் மற்றும் சொத்துகளை முறைகேடாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்காது.
நாடு பொருளாதார ரீதியான சிக்கலை சந்தித்தமைக்கான பொறுப்பில் ஒரு பங்கு அரசியல்வாதிகளை சார்ந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இது இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்ப, அவர்களின் அதிகாரத்துக்காக அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவிர்ப்பது தொடர்பில் அரச அதிகாரிகளே முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
அதிகாரிகள் சுயாதீனமாகவும் மத்தியஸ்தமாகவும் செயற்பட்டால், அரச சொத்துகளை முறைகேடாக பயன்படுத்துவதற்கான அதிகாரம் அரசியல் தலைமைகளுக்கு கிடைக்காது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.