ஜனாதிபதி நுவரெலியாவுக்கு சுற்றுலா விஜயம்!

0
122

நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய நேற்றுக் காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பேகோ ட்ரைல் பாதையினூடாக ஜனாதிபதி நடைபயணமாக இப்பகுதிகளை மேற்பார்வை செய்தார்.
பேகோ ட்ரைல் என்பது இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளூடாகச் செல்லும் 300 கிலோ மீற்றர் மலையேறும் பாதையாகும்.
ஆசியாவின் மிக ரகசியமான பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.
பேகோ ட்ரைல் என்று அறியப்படும் இந்தப் பாதையானது கண்டியில் ஆரம்பித்து ஹட்டன் ஊடாக ஹோட்டன் தென்ன தேசிய வனப் பூங்கா வரையில் செல்கிறது. அதன் பின்னர் ஹப்புத்தலை – எல்ல ஊடாக பயணித்து அழகிய நுவரெலியா நகரத்தில் பயணத்தை நிறைவு செய்யலாம். இந்த பாதை பிரித்தானிய காலணித்துவக் காலத்தில் பெருந்தோட்டங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்குச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
பேகோ ட்ரைல் பாதையினூடாக 3.2 கிலோ மீற்றர் தூரத்திற்கு நடைப் பயணமாக சென்ற ஜனாதிபதி கோர்ட் லொட்ஜ் தோட்ட மக்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
அப்பகுதி மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பு வரவேற்பளித்ததோடு, ஜனாதிபதி அங்குள்ள மக்களுக்கு தமிழ், சிங்களப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் கல்வி, சுகாதார பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியிருந்த ஜனாதிபதி, உயர்தரத்தின் பின்னரான அப்பகுதி பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தார்.
அதனையடுத்து தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
கோர்ட் லொட்ஜ் தோட்டத்தில் ‘லைட் பிரைட்’ என்ற நாமத்திலான தேயிலை வகை உற்பத்தி செய்யப்படுவதோடு, அங்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி தொழிற்சாலை ஊழியர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இப்பகுதியின் ஊடாக மலையேறும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான தேநீர் கோப்பை ஒன்றை அருந்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தினார்.
பின்னர் பேகோ ட்ரைல் பாதையினூடாக சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.