ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மோஹாத் மட்டக்களப்புக்கு விஜயம்

0
143


ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மோஹாத் இன்றுமட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் மேற்கொண்டதுடன்
மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

2003ஆம் காலப்பகுதியில் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மோஹாத் ஜேர்மனியின் முனீச் மாநகர முதல்வராகயிருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் கீழ் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் ஜேர்மன் முனிச் மாநகரசபைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படியின் கீழ் பெருமளவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த
ஜேர்மன் முனீச் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் மோஹாத் உடன்படிக்கையின் கீழ் 2003ஆம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் குறித்த வாகனங்கள் சிறந்தமுறையில் பராமரிக்கப்படுகின்றமை குறித்து முதல்வருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததுடன் தொடர்ந்து மாநகரசபையின் மண்டபத்தில் மாநகரசபை முதல்வர் உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் முனீச் மாநகரசபையினால் மட்டக்களப்பு மாநகரசபையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு ஊடாக ஒப்பந்தங்களை செய்து மேலும் அபிவிருத்திப்பணிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.