தனிமைப்படுத்தலை மீறிய 2,700 பேருக்கு எதிராக வழக்கு

0
298

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இது வரையில் 2,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களுள் 2,751 பேருக்க எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம்  அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் , 2,823 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 2,751 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு மேல்மாகாணத்தில் நாளையும் , நாளை மறுதினமும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றவுள்ளதுடன் , அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

  இதன்போது மேல்மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல பயன்படுத்தப்படும் 11 இடங்களிலும் , மேல் மாகாணத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலும் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை , மேல்மாகாணத்தில் இயங்கிவரும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய நாட்டின் எந்த பகுதிகளில் வசித்தாலும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சட்டவிதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.