தனியார் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும்!

0
127

டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவை ஸ்தம்பித்துள்ளதாகவும் இ.போ.ச டிப்போக்களினூடாக இதுவரை எரிபொருள் கிடைக்கவில்லை என்றும் அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,

போக்குவரத்து அமைச்சு கூறியதைபோன்று இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களினூடாக தனியார் பஸ்களுக்கு டீசல் கிடைக்கும் என்று ஒருவாரம் முழுவதும் எதிர்பார்த்திருந்தோம். எனினும் எரிபொருள் கிடைக்கவில்லை.

இன்றைய தினத்திலாவது எரிபொருள் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தோம். கிடைப்பதற்கான அறிகுறிகள்கூட இல்லை.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் பல நாட்களாக நீண்டவரிசையில் காத்திருக்கின்றோம்.

பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. எனவே கூடிய விரைவில் எரிபொருளை பெற்றுத்தருமாறு போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அதேபோன்று இ.போ.ச டிப்போக்களின் உள்ளே எரிபொருளை பெற்றுத்தர முடியவில்லையாயின் நாட்டிலுள்ள பிரதான நகரங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றை எமக்காக ஒதுக்கித் தருமாறு கோருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.