எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாம் நாளாக இடம்பெற்றுவருகிறது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு, 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று ஆரம்பமான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை வரை நடைபெறவுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான, இன்று முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குப் பதிவு இடம்பெறுகின்றது.
காலை 9 மணி ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு மாலை 4 மணி வரை நடைபெறும்.
தபால் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்பதற்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நிலையங்கள்
என்பவற்றுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.