தமிழ் தேசிய தரப்புகளின் மாற்றத்தை வரவேற்கிறேன் – ஜெய்சங்கரிடம் டக்ளஸ் தெரிவிப்பு!

0
225

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த ஆரம்பம் என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை தாம் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவருத்தி உட்பட பல திட்டங்களுக்கான கோரிக்கைகளையும் இந்தியாவிடம் அவர் முன்வைத்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்துப் பேசிய போதே மேற்கண்ட விடயங்களை கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் என்று அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அத்துடன், வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான சுமார் 23 திட்டங்களைகளை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் முன்வைத்தார்.

அத்துடன், வடகடல் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கடன் திட்டத்தின் அடிப்படையில் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து, காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை, பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து சேவை, காரைநகரில் அமைந்துள்ள சீநோர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளல் போன்ற எதிர்பார்ப்புக்களையும் அவர் வெளியிட்டார்.