வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைக்க நீண்டகால நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது என இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக, எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் அவசரமாக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நிலைமைகளை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். குடிப்பரம்பலை மாற்றி அமைப்பதற்கான இலக்கை நிறைவேற்றுவதற்கு தடையாக இந்தியா இருந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருகோணமலை அபிவிருத்தி திட்டத்தில் அந்நாட்டை பங்காளியாக இணைத்து கையூட்டு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் தொல்பொருளின் பெயரால் இரண்டு மதங்களுக்கு இடையில் பதற்றங்களை தோற்றுவிப்பதற்கு அண்மைய நாட்களில் தீவிரமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையில் அந்தச் செயல்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, மகாவலி ‘எல்’வலயத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சர் ரொஷான் ரணசிங்க செப்ரெம்பர் 26ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நகர்த்துவதற்கு ஆயத்தமாகியிருந்தார். இந்த விடயங்களுக்கு சமாந்தரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வடக்கு, கிழக்கில் மேற்படி நடவடிக்கைகள் ஊடாக குடிப்பரம்பலையும் நிலப்பரம்பலையும் மாற்றியமைக்கும் செயல்பாடும் இடம்பெறுகிறது என்பதையும், மதங்களின் பெயரால் பொதுமக்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு பதற்ற நிலைமைகள் அதிகரித்துச் செல்வதையும் வெளிப்படுத்தியுள்ளனர். சம்பந்தன் ஜனாதிபதிக்கான கடிதம் மூலமும் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் பாராளுமன்றத்திலும் குறித்த விடயங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர். அப்போது அரசாங்கத்தின் அமைச்சர்களோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அவர்களுடன் முரண்படவுமில்லை. பதிலளிக்கவுமில்லை. இதற்கு காரணங்கள் உள்ளன. இதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் ஏலவே 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்பதற்கு தயக்கம் காண்பித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை. எனவே, வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உடனடியாக இந்த நகர்வை இடைநிறுத்துவதற்கு அனைத்துக் கட்சி கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்து நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும். பாராளுமன்றம் மற்றும் சர்வதேச அரங்குகளில் விடயத்தை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலமே மேற்படி திட்டம் முன்னகர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த முடியும். இல்லாவிட்டால், இந்தியாவும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தியில் கூட்டிணைக்கப்பட்டு, தமிழ்த் தரப்பும் 13ஆவது திருத்தத்தை ஏற்க மறுக்கின்ற சூழல் நீடித்தால், வடக்கு, கிழக்கில் நடைபெறும் மாற்றங்கள் விரைவுபடுத்தப்படும். சம்பந்தன், சுமந்திரன், கஜேந்திரகுமார் கூறியது போன்று தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்படும் சூழல் ஏற்பட்டுவிடும் என தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.