தம்பிலுவில் தேசிய பாடசாலையில் மரணித்த சிவபாலன் கிஷானுக்கு நீதிகோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
பாடசாலையின் நிருவாக சீர்கேடே மாணவனின் உயிர் இழப்புக்கு காரணம் உடனடியாக அதிபரை வெளியேற்றுங்கள் பெற்றோர் ஆவேசம்
அம்பாரை திருக்கோவில் வலயக்கல்விப் அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தரம் 08ல் கல்வி கற்கும் மாணவன் சிவபாலன் கிஷானின் உயிர் இழந்தமைக்கு பாடசாலை நிருவாக சீர்கேடே காரணம் என தெரிவித்து நீதிகோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்த ஆர்ப்பாட்டகார்கள் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா வெளியில் மதுபானம் விற்பவர் பாடசாலையில் சிற்றுண்டி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது முறையோ பாடசாலையின் நிருவாக சீர்கேடே மாணவனின் உயிர் பலிக்கு காரணம் குடும்ப நிருவாகமே வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பி பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்களை பாலியல் துஷ்ப்பிரயோம் செய்த ஆசிரியர் மற்றும் பாடசாலையில் முறையாக கல்வி கற்றுக் கொடுக்காது பிரதேச மாணவர்களின் கல்வியை சீரழிப்பதோடு மாத சம்பளம் என்ற பெயரில் அரசின் பணத்தை அழிக்கும் ஆசிரியர்களையும் உடனடியாக பாடசாலையில் இருந்து வெளியேற்றுமாறு கோரி இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று இருந்தன.
இவ் ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் சமூக நலன் விரும்பிகள் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் இளைஞர்கள் என பெறும் எண்ணிக்கையானவர்கள் அணிதிரண்டு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் ஆகியோரிடம் கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு மகஜர்களும் ஆர்பாட்டகாரர்களால் கையளிக்கப்பட்டு இருந்தன.