திருக்கோவிலில் 2400 மில்லியன் பெறுமதியில் கஞ்சிகுடிச்சாறு குடிநீர் திட்டம்

0
196

திருக்கோவில் பிரதேசத்திற்கு 2400மில்லியன் பெறுமதியான கஞ்சிகுடிச்சாறு குடிநீர் திட்டம் குறித்த கூட்டம் விவசாயிகளின் எதிப்பினால் தீர்வின்றி நிறைவு பெற்றது.

அம்பாறை திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு குளத்தினைப் புரனமைப்பதன் ஊடாக திருக்கோவில் பிரதேசத்தில் குடிநீர் இன்றி வாழம் மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீரினை வழங்கும் நோக்குடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் 2400மில்லியன் பெறுமதியான குடிநீர் திட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் திருக்கோவில் பிரதேச செயலாளரின் ஓழுங்கமைப்பில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் குடிநீர் தேவையென்ற தரப்பினரும் குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என்ற தரப்பினரும் எதிர்மாறான கருத்துக்களை சபையில் தெரிவித்து இருந்ததுடன் மக்கள் பிரதிநிதிகளான அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உட்பட துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

எனினும், கஞ்சிகுடியாறு விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக குறித்த திட்டம் தொடர்பில் எவ்வாறான தீர்வுகளும் எட்டப்படாது கூட்டம் நிறைவு பெற்றது.

திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு குளத்தினை புனரமைத்து நீர் மட்டத்தினை ஒரு அடியால் உயர்த்தி பிரதேசத்திற்கான குடிநீரை தடையின்றி தொடர்ச்சியாக வழங்கும் நோக்குடன் தேசிய நீர்வழங்கல் அமைப்பு சபையினால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தினை அமுல்படுத்தும் போது விவசாயம் பாதிப்படையக்கூடும் என தமது பக்க நியாயங்களை தெரிவித்து அனுமதி வழங்க முடியாது என ஒட்டுமொத்த கஞ்சிகுடியாறு விவசாயிகள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் திட்டத்திற்கு முற்றும் முழுதாக மறுப்பு தெரிவித்து இருந்தனர்

இந்நிலையில் அரசாங்கத்தினால் 2400மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு குளத்தினை புனரமைப்பதன் ஊடாக தமக்கான சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சபையில் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீருக்காக காத்திருக்கும் மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச அதிகாரிகள் மற்றம் விவசாயிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்கள் காரணமாக இறுதியில் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவு பெற்றதுடன் திருக்கோவில் பிரதேச மக்களின் குடிநீர் தேவையை தொடர்ச்சியாக தடையின்றி பெற்றுக் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட 2400மில்லியன் பெறுமதியாக நிதி கையழுவி வேறு பிரதேசத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளதாகவும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகள் விசனம் தெரிவித்து இருந்தனர்.

இதேவேளை மேலதிக அரசாங்க அதிபர் இறுதியாக கருத்து தெரிவிக்கையில் விவசாயமும் குடிநீரும் ஒன்றையொன்று ஒதிக்கிவிட முடியாது எனவும்

திருக்கோவில் பிரதேசத்தில் சுத்தமான குடிநீருக்காக தினம் தினம் போராடிக் கொண்டு இருக்கும் குழந்தைகள் உட்பட மக்களின் தாகத்தை தனிப்பதற்காக இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்ற தரப்பினர் பிரதேசத்தின் எதிர்கால குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டும் என்பதுடன் இந்த வரலாற்றுத் தவறினை செய்ய வேண்டாம் எனவும் குறித்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.